உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ரிட் வழக்கு தாக்கலுக்கான கட்டணம் குறைப்பு: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று, ரிட் வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நீதிமன்ற கட்டணம் குறித்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்டம் 2017ல் கொண்டு வரப்பட்டது. அதன்படி  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை வழக்குகளை (ரிட் மனு) தாக்கல் செய்வதற்கு ரூ.1000 கட்டணமும், ரிட் மேல் முறையீடு வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ரூ.2000 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில்  உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 30ம் தேதி வழங்கிய இடைக்கால உத்தரவில் இந்த கட்டணங்களை மறு பரிசீலனை செய்யுமாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசானது ரிட் வழக்குகளை தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணத்தை ரூ.750 ஆகவும், ரிட் மேல் முறையீடு வழக்குகளை தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணத்தை ரூ.1500 ஆகவும் குறைக்க முடிவு செய்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

* புதிய மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

சட்டப்பேரவையில் சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது:  தமிழகத்தில் 1680க்கு மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அதில் 15,33,175 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை குறைப்பதற்கு விரைவில் மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும். புதிதாக 3 மாவட்ட நீதிமன்றங்கள் வர இருக்கிறது. மேலும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைத்திட அரசு சார்பில் இலவச சட்ட உதவி மையம் உள்ளது. விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும்.

Related Stories:

More
>