டிஜிபி மீதான பாலியல் புகார் விசாரணை விழுப்புரம் கோர்ட்டுக்கு முழு அதிகாரம்: தமிழக அரசு தரப்பில் பதில் மனுதாக்கல்

விழுப்புரம்: டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழுப்புரம் கோர்ட் விசாரிக்க முழு அதிகாரம் இருப்பதாக, அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்தனர். பணியிலிருந்த பெண் எஸ்பியை காரில் அழைத்து  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின்பேரில், தமிழக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களை  தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2ம்தேதி, எஸ்பி கண்ணன் தன்னை வழக்கிலிருந்து  விடுவிக்கக்கோரியும், வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் கேட்டும் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக விசாரணை நடந்தது. சிபிசிஐடி போலீஸ் தரப்பில், எஸ்பி கண்ணனை விடுவிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். சிறப்பு டிஜிபி  தரப்பில், இந்தவழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட் அதிகார வரம்புக்குள் வராது என்று தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது, இந்த மனு மீது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்க முழுஅதிகாரம் உள்ளது. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இருப்பதாக தெரிவித்தார். ேமலும் அடுத்த வாய்தாவில் உத்தரவு நகலை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வரும் 14ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories:

>