அண்ணா பல்கலை வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு உருவ சிலை: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை; சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உருவ சிலை அமைக்கப்படும். சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உருவ சிலை அமைக்கப்படும். தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் உருவ சிலை அமைக்கப்படும்.

இந்தி திணிப்பை எதிர்த்து முதன் முதலில் உயிர்தியாகம் செய்த மொழிப்போர் தியாகி கீழபழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் உருவ சிலை அமைக்கப்படும். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உருவ சிலை அமைக்கப்படும். வங்க கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியில் உருவ சிலை அமைக்கப்படும். முன்னாள் நிதி அமைச்சருமான நடமாடும் பல்கலைக்கழகம் மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் உருவ சிலை அமைக்கப்படும்.

பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு, மயிலாடுதுறையில் உருவ சிலை அமைக்கப்படும். தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாருக்கு, புதுக்கோட்டையில் உருவ சிலை அமைக்கப்படும். தமிழ் அறிஞர் டாக்டர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உருவ சிலை அமைக்கப்படும். மேற்கண்ட தலைவர்களுக்கு உருவ சிலைகள் நிறுவ ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி உள்ளிட்ட தியாகசீலர்களின் நினைவு மண்டபங்கள் ரூ.3 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் முழு உருவ சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும். இதற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழ்பவானி பாசனதிட்டம் உருவாக காரணமாக இருந்த ஈஸ்வரனுக்கு உருவ சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.

* கலைஞர் எழுதுகோல் விருது

இதழியல் துறையில், சமூக மேம்பாட்டிற்காகவும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

* பத்திரிகையாளர் நலவாரியம்

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், நலவாரிய உதவிதொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘‘பத்திரிகையாளர்கள் நலவாரியம்”  அமைக்கப்படும். பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.3 லட்ச குடும்ப உதவி நிதி இனி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும்  நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Related Stories:

More
>