திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக். 7 முதல் வருடாந்திர பிரமோற்சவம்: 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடத்த முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம் மிக சிறப்பானதாகும்.  இந்த உற்சவத்தை காண ஒரு லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை திரண்டு வந்து 4 மாட வீதிகளில் வீதி உலா வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்வார்கள். கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயிலில் பக்தர்கள் இன்றி பிரமோற்சவம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பொதுமக்கள் அதிகம் கூடும் உற்சவங்களை நடத்த வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதனை பக்தர்கள் இன்றி நடத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே கோயிலுக்குள் பிரமோற்சவத்தின்போது சுவாமி வீதி உலா வரக்கூடிய அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தேவஸ்தான தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதேநேரம், ஆன்லைனில் முன்பதிவு செய்த குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே பிரமோற்சவத்துக்கு அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>