சட்டப்பேரவையில் தொழுகைக்கு தனி அறை என்னை வேணும்னா அடிங்க... பாஜ எம்எல்ஏ.க்களிடம் சபாநாயகர் உருக்கம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தொழுகை செய்ய அறை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏ.க்களிடம், ‘நீங்கள் கோபமாக இருந்தால், என்னை அடித்து விடுங்கள்’ என்று சபாநாயகர் உருக்கமாக பேசி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை நடக்கும் காலங்களில், முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் தொழுகை நடத்துவதற்காக தனி அறையை சபாநாயகர் ஒதுக்கி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜ எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்தில் அனுமன் கோயில் மற்றும் பிற மதத்தினரின் வழிப்பாடு தலங்களை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவாகரம் தொடர்பாக, நேற்று சட்டப்பேரவைக்கு காவி உடையில் வந்த பாஜ எம்எல்ஏக்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர். ஹனுமன் பக்தி பாடல்களை பாடியபடி, அவையின் மைய பகுதியில் அமர்ந்து தொழுகைக்கு அறை ஒதுக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மதியம் 12.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்தது. அப்போது சபாநாயகர் ரபீந்திர நாத் மஹ்தோ பேசுகையில், ‘‘நீங்கள் கோபமாக இருந்தால், என்னை அடித்து விடுங்கள். இது, 3.5 கோடி மக்களின் நம்பிக்கையின் கேள்வி. உங்கள் நடத்தை வலியை அளிக்கிறது,’’ என்றார். இதற்கு பதிலளித்த பாஜ எம்எல்ஏ சிபி  சிங், ‘‘உங்கள் நடத்தை பாரபட்சமாக இருப்பதை பார்க்கும் போது வலிக்கிறது” என்றார்.

* உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘சட்டப்பேரவையில் தொழுகைக்காக தனி அறை ஒதுக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது, சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* உபி.யிலும் கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏ.வாக உள்ள இர்பான் சொலங்கி, இம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில், ‘‘நான் கடந்த 15 ஆண்டுகளாக எம்எல்ஏ.வாக இருக்கிறேன். பேரவை நடக்கும் காலங்களில், முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் தொழுகை நடத்துவதற்காக வெளியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஜார்க்கண்டில் ஒதுக்கப்பட்டது போல், இந்த சட்டப்பேரவை வளாகத்திலும் தொழுகைக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்,’ என்று சபாநாயகரிடம் முறையிட்டார்.

Related Stories:

More
>