தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட பெகாசஸ் வழக்கில் விரிவான அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சம்மதம்

புதுடெல்லி: பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு. விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்கும்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தும்படியும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடும்படியும் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால தொடர் முழுவதும் அமளியால் முடங்கியது. ஆனால், இந்த கோரிக்கைகள் எதையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2 பக்க பிரமாணப் பத்திரத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், முழு விவரங்களும் அடங்கிய விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, பெகாசஸ் தொடர்பாக விசாரனை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூரை மேற்கு வங்க மாநில அரசு தனியாக நியமனம் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பெகாசஸ் வழக்கில் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என கடந்த 25ம் தேதி தெரிவித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்வி.ரமணா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என தலைமை நீதிபதி கேட்டார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, பெகாசஸ் வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், அதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More
>