பொதிகை ஒளிப்பதிவாளர்களின் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம்

புதுடெல்லி: மதுரை மற்றும் கோவை பொதிகை தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்களின் பணியிட மாற்ற அறிவிப்பை திரும்பப் பெறவும், தமிழ்நாட்டில் உள்ள பொதிகை கேந்திரங்களின் சேவை மக்களுக்கு தடையில்லாமல் கிடைத்திடவும் வழிவகை செய்யுமாறும் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

திமுக எம்பி தயாநிதி மாறன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதிகை கேந்திரம் சமீபகாலமாக எந்தவித தொலைநோக்கு திட்டங்களோ அல்லது முன்னேற்பாடுகளோ இன்றி பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் சென்னை, கோவை மற்றும் மதுரையின் பொதிகை தொலைக்காட்சிகளில் பணிபுரியக் கூடிய ஒளிப்பதிவாளர்களுக்கு பணியிட மாற்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், அனுபவமிக்க மூத்த பணியாளர்களின் ஓய்வு மற்றும் ஆட்குறைப்பு போன்ற காரணத்தினால் பொதிகை தொலைக்காட்சியின் எதிர்கால நிலை குறித்தும், உள்ளூர் நிகழ்ச்சிகளை இடரின்றி ஒளிபரப்புவது குறித்தும் கவலை எழுந்துள்ளதாகவும் அத்தொலைக்காட்சியின் ஊழியர்களிடம் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்பணியிட மாற்ற அறிவிப்பு என்பது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னையாக உள்ளது. பெரும்பாலான பணியிட மாற்றம் என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளன, இம்மாற்றமானது மாநில கேந்திரங்களை வலுவிழக்கச் செய்துவிடும். எடுத்துக்காட்டாக சமீபத்திய அறிவிப்பான புதுச்சேரி கேந்திரயத்தின் ஒட்டு மொத்த ஒளிப்பதிவாளர் குழுவின் பணியிட மாற்ற அறிவிப்பு, அக்கேந்திரத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியின் சிறப்பு என்பது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பணியினை சார்ந்து தான் அமையும். இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டில் பல்வேறு கேந்திரங்களில் உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் அந்தந்த வட்டார மொழிகளின் அழகியல் என்பது படிப்படியாக குறைந்துவிடும்.

டெல்லியில் உள்ள குழுவின் இத்தகைய நடவடிக்கைகளால் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனம் தனது பன்முகத்தன்மையை இழக்கும், மேலும் தூர்தர்ஷன் கொள்கைகளுக்க எதிராக அமைவதோடு பத்திரிக்கை துறையின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்து பொதிகை கேந்திரத்தின் தன்னாட்சியைக் குறைத்துவிடும். எனவே, தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மற்றும் கோவை பொதிகை தொலைக்காட்சியில் உள்ள ஒளிப்பதிவாளர்களின் பணியிட மாற்றத்திற்கான ஆணையை மறுபரிசீலனை செய்து அவர்களை தங்களது சொந்த ஊரிலேயே பணியாற்ற பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பரிந்துரைக்குமாறும், உள்ளூர் கேந்திரியங்களுக்கு புதிய பணியாளர்களை நியமித்தும் கூடுதலான நிதிகளை ஒதுக்கி அந்தந்த நிலப்பரப்பின் வாழ்வியலை மக்களுக்க பொதிகை தொலைக்காட்சி வாயிலாக சிறப்பாக கொண்டு சேர்க்க உதவிடுமாறும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தயாநிதிமாறன் எம்.பி. கூறி உள்ளார்.

Related Stories:

>