×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எம்மா ரடுகானு: பியான்கா, ஸ்வியாடெக் வெளியேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இளம் வீராங்கனை எம்மா ரடுகானு முதல்முறையாக  தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில்  இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு(18வயது, 150வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸ்(28வயது, 43வது ரேங்க்) ஆகியோர் மோதினர். உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா)யை வீழ்த்தியவர் என்பதால் ஷெல்பி எளிதில் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எம்மா அதிரடியாக விளையாடி 6-2, 6-1  என நேர் செட்களில் எளிதில் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 6 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக எம்மா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் யுஎஸ் சாம்பியனும் கனடா வீராங்கனையுமான பியான்கா ஆண்ட்ரீஸ்கு(21வயது, 7வது ரேங்க்),  கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி(26வயது, 18வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். இரண்டு தரப்பிலும் கடுமையாக மோதியதால் ஆட்டம் 3 மணி 29 நிமிடங்கள் நீண்டது. அதில் மரியா 6-7(2-7), 7-6(8-6), 6-3 என்ற செட்களில் போராடி வென்று  காலிறுதிக்கு  முன்னேறினார். மேலும் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்(12வது ரேங்க்) 7-6(14-12), 6-3 என நேர் செட்களில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கையும்(8வது ரேஙக்), செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா(4வது ரேங்க்) 7-5, 6-4 என நேர் செட்களில் ரஷ்யா வீராங்கனை அனஸ்டசியா பாவ்லியுசென்கோவையும்(15வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.

காலிறுதியில் ஜோகோவிச்: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் உலகின் நெம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா) 1-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் அமெரிக்க வீரர் ஜென்சன் புரூக்ஸ்பியை(99வது ரேங்க்)  வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். கூடவே அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி), மேட்டியோ பெரட்டினி(இத்தாலி), லாய்டு ஹாரிஸ்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Tags : Emma Radukanu ,US Open ,Bianca ,Sviatech , Emma Radukanu in US Open tennis quarterfinals: Bianca, Sviatech out
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்