×

அண்ணனை கடத்தி, வீட்டை எழுதிக்கேட்ட அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் கைது: கார் பறிமுதல்

சென்னை: பெரம்பூர் தீட்டி தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (50). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது அம்மா பெயரில் உள்ள  வீட்டின் 2வது தளத்தில் வசித்து வருகிறார். தரை தளத்தில் பெற்றோர் வசிக்கின்றனர். இந்நிலையில், பெரம்பூர் டி.டி.தோட்டம் 1வது தெருவில் விசத்து வரும் புருஷோத்தமனின் சகோதரியும், கொளத்தூர் பகுதி 68வது வட்ட அதிமுக செயலாளராருமான வத்சலா (46), கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அத்துமீறி முதல் தளத்தில் உள்ள வீட்டில் குடியேறினார். இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த 5ம் தேதி புருஷோத்தமன் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் தனது ஆட்டோவுடன் நின்றிருந்தபோது, அதிமுக கொடி கட்டிய கார், வேகமாக அங்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய வத்சலா, ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் அவரது கணவர் லோகநாதன் (50), கடல்வள ஆராய்ச்சிதுறையில் வேலை செய்து வரும் மகன் ஜெயராம் (24), கல்லூரியில் படித்து வரும் இளையமகன் ருத்ரன் (21) ஆகியோர், புருஷோத்தமனை கத்தி முனையில் காரில் கடத்தினர்.
கார், ஆந்திரா மாநிலம் சத்தியமேடு பகுதியில் உள்ள டேமுக்கு சென்றது. அங்கு ஒரு இடத்தில் புருஷோத்தமனை அடைத்து வைத்து, சரமாரியாக தாக்கி, சொத்துக்களை எழுதி கொடுக்கும்படி சித்ரவதை செய்துள்ளனர்.

அனைவரும் இரவு நேரத்தில் தூங்கியபோது அங்கிருந்து தப்பிய புருஷோத்தமன், மறுநாள் மதியம் சென்னை வந்துள்ளார். பிறகு சம்பவம் குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வத்சலா, அவரது கணவர் லோகநாதன், மகன்கள் ஜெயராம், ருத்ரன் ஆகியோர் மீது ஐபிசி 120(பி), 294(பி), 341, 323, 363, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.  இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : AIADMK , AIADMK leader arrested for kidnapping brother and writing home: Car confiscated
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...