×

365 நாட்களும் தண்ணீர் நிற்கும் வேளச்சேரி ஏரியை தூர்வாரி படகு சவாரி விட வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா பேச்சு

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று சட்டத்துறை, மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசியதாவது:
வேளச்சேரி ஏரி பரிதாப நிலையில் உள்ளது. அது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியா அல்லது மாநகராட்சி பராமரிக்கும் ஏரியா என்று தெரியாத அளவுக்கு உள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சீர் செய்து படகு சவாரி விட்டார்கள். அது பெயிலியராகிவிட்டது. ஆனால் வேளச்சரி ஏரியில் 365 நாட்களும் தண்ணீர் நிற்கும். அந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி படகு சவாரி விட்டு சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீரை ஏரியில் கலக்க விடுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும். வேளச்சேரி காந்தி சாலையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஐஐடி கிருஷ்ணா கேட் திடீரென மூடப்பட்டு ஒரு தீண்டாமை சுவரை ஐஐடி நிர்வாகம் எழுப்பியுள்ளது. இதனால் அந்த பாதையை பயன்படுத்தி வந்த அனைத்து தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆட்சியில் அந்த சுவரை அகற்றி தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இறுதியாக முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது, திமுக தேர்தல் அறிக்கையில் இந்த சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எனவே அந்த சுவரை அகற்றி எனது தொகுதி மக்களின் துயரை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Congress ,MLA ,Asan Maulana ,Lake Velachery , Congress MLA Asan Maulana speaks on boat ride across 365 days
× RELATED திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல்...