மாதம் 3 உயிரிழப்புகள் தொடர்கதையாகிறது நெல்லை - தென்காசி சாலையில் அடிக்கடி அரங்கேறும் விபத்துகள்: பணிகள் நடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுமா?

நெல்லை: நெல்லை - தென்காசி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இச்சாலையானது இரண்டு மாவட்டங்களை மட்டுமின்றி, தமிழகம்- கேரளா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் வாகனங்கள், சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு இச்சாலை வழியாக கேரளா செல்கின்றன. குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்துகின்றன.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும், பள்ளிகளும் இச்சாலையில் அமைந்துள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.

கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இரண்டு வழி சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடப்பதால் போதுமான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இச்சாலையில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டிப் பலகைகள், இரவில் எச்சரிக்கை செய்யும் விளக்குகள், வாகனங்கள் செல்லும் பகுதியையும் பணிகள் நடக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் எதுவும் அமைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை அமைப்பு பணிகள் நடைபெறுவதால் சாலையின் அகலம் குறைவு காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகுகின்றனர். சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் வழியில்லை.

தென்காசியில் இருந்து நெல்லைக்கு அரை மணி நேர இடைவெளியில் இடைநில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை குறிப்பிட நேரத்திற்குள் வந்து சேரவேண்டும் என்பதால், சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இடைநில்லா பேருந்துகள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த இடைநில்லா பேருந்துகளால் சராசரியாக மாதம் மூன்று உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஆலங்குளம் தனியார் பாலிடெக்னிக் அருகே நெல்லையில் இருந்து தென்காசி சென்ற இடைநில்லா பேருந்து கவிழும் நிலைக்கு சென்று பின்னர் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவரிடம் அசுர வேகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, அலுவலக நடவடிக்கைகளுக்குப் பயந்து நாங்கள்  வேகமாக வண்டி ஓட்டி குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைய வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.

அசுர வேகத்தை கட்டுப்படுத்தவேண்டும்

நெல்லை- தென்காசி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் குறித்து தென்காசி பயணிகள் சங்கத்தை சேர்ந்த பொறியாளர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், ‘‘நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். இந்த சாலையின் உதவி பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் என அனைத்து அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்புகொண்டு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதி அளித்தனர். ஆனாலும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

கிராம சாலைகள் நெடுஞ்சாலைகள் உடன் இணையும் பகுதியில் ஒரு எச்சரிக்கை பலகை அமைத்தல், சாலைப் பணிகள் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நடைபெறும் பகுதியும் போதுமான தடுப்புகள் கொண்டு பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தடுப்புகளில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் விளக்குகள் அமைத்தல் வேண்டும். போதுமான வழிகாட்டி பலகைகள், எச்சரிக்கை பலகைகள், வேகத் தடுப்புகள் ஆகியவை முறையாக அமைத்தல் வேண்டும். மேலும் அசுர வேகத்தில் செல்லும் அரசு பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்தி சாலைப் பணிகள் நடைபெறும் பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்த படவேண்டும்.’’ என்றார்.

Related Stories: