கன்னியாகுமரியில் சாலையில் இயங்க கூடிய மெட்ரோ நியோ ரயில் திட்டம் வருமா?.....சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய கோரிக்கை

நாகர்கோவில்: சாலைகளில் இயங்க கூடிய மெட்ரோ நியோ ரயில் பயண திட்டம், கன்னியாகுமரி உள்பட முக்கிய சுற்றுலா நகரங்களில் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் சிறு நகரங்களில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ லைட், மெட்ரோ நியோ ஆகிய ரயில் சேவைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளங்களில் மெட்ரோ ரயில் இயங்குவது போல், டயர் மூலம் சாலைகளில் பிரேத்யக வழிப்பாதை, உயரழுத்த மின் கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டு 2 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் செயல்படுத்துவது தான் மெட்ரோ நியோ திட்டம் ஆகும்.

இந்த மெட்ரோ நியோ ரயில் ஒரு கி.மீ. க்கு ஆகும் செலவு ரூ.71 கோடி என்று கண்டறியப்பட்டு உள்ளது. 750 வால்ட் டி.சி.யில் இயங்கும் மெட்ரோ நியோவின் மேல்நிலை இரட்டை கம்பி இழுவை அமைப்பு எளிதில் நிறுவக்கூடிய, பயணி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானது என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. மோதல் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களான முன்னோக்கி, பக்க மோதல் கட்டுப்பாடு, தானியங்கி வேக கட்டுப்பாடு, தானியங்கி பிரேக்கிங் பயன்பாடு ஆகியவற்றுடன் பெட்டிகளுக்கு இடையே பாதுகாப்பான தூர அளவும் செய்யப்படும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற இடத்தில் நியோ மெட்ரோ முதன் முதலாக 32 கி.மீ. தூரம் முதல் கட்டமாக அமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தை ெபாறுத்தவரை 2ம் கட்ட நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக சட்டமன்ற நிதி அறிக்கையில் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த 2 நகரங்களையும் தவிர்த்து திருநெல்வேலி, சேலம் போன்ற நகரங்களில் நியோ மெட்ரோ ரயில் சேவைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்கு ஒன்றிய அரசின் வீட்டு வசதி,  நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பீக் அவர்ஸ் டிராபிக் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கள் அனுமதிக்கப்படுகிறது.

1 மணி நேரத்துக்கு 5000 வரை இருக்க கூடிய சிறிய நகரங்களுக்கு நியோ மெட்ரோ சேவை அமைக்கலாம் என்று பரிந்துரைத்து உள்ளது. இந்த நியோ மெட்ரோ ரயில் சேவை என்பது, சாதாரண சாலை போக்குவரத்து தன்மை கொண்டதுடன், குறுகிய சாலை, வளைவுகள் நிறைந்த சாலைகள் என்ற வகையிலான சாலைகளிலும் நியோ மெட்ரோ டிரக்குகள் இயங்க கூடியவை ஆகும். 2 டிரக்குகள் சேர்ந்து 8 மீட்டர் அகலம் கொண்ட பாதை தேவைப்படும். ஒருசில இடங்களில் சாலையின் அகலம் குறைவாக இருந்தால் 4 மீட்டர் அகலம் கொண்ட ஒரு வழி பாதை போதுமானதாக இருக்கும். 18 மீட்டர் நீளம் கொண்ட பெட்டியில் 200 பயணிகள் பயணம் செய்யலாம். 24 மீட்டர் நீளம் கொண்ட பெட்டியில் 250 பயணிகள் பயணம் செய்யலாம்.

ஒரு சில இடங்களில் பாலத்துக்கு அடியில் மின்சார ஒயர்கள் அமைக்க முடியாத இடங்களாக இருந்தால் பேட்டரியில் இயக்கும் வசதியும் உள்ளது. எனவே தமிழகத்தின் 2ம் கட்ட நகரங்களில் இது போன்ற மெட்ரோ நியோ போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தலாம். குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் நாகர்கோவில் நகரில் மெட்ரோ லைட் ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தை ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தும்பட்சத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

Related Stories:

More
>