போராட்டம் நடத்த விவசாயிகள் கூடுவதால் அரியானாவில் 144 தடை உத்தரவு: இணையதள வசதிகள் முடக்கத்தால் பதற்றம்

கர்னால்: அரியானாவின் கர்னாலில் விவசாய அமைப்புகள் கூடுவதால், அப்பகுதியை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் இன்று காலை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, அரியானா மாநிலத்தில் கடந்த ஆக.  28ம் தேதி அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் ெசல்லும் பாதையில்  விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போக்குவரத்தை  சீர்குலைத்ததாக கூறி அம்மாநில போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து, அரசியல் தலைவர்களும், விவசாய அமைப்புகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், அரியானா பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னம் சிங்  சாதுனியின் அழைப்பின் பேரில், இன்று (செப். 7) கர்னலால் பகுதியில் உள்ள  புதிய தானிய சந்தையில் விவசாய அமைப்புகளின் கூட்டம் நடத்த ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. அதனால், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக கர்னால்  பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கர்னால், குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த் மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் இணையதள வசதிகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அரியானா அரசு சார்பில் கர்னால் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘செவ்வாய்க்கிழமை (இன்று) நாள் முழுவதும் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை நிறுத்தப்படும்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்: 44 (அம்பாலா-டெல்லி) வழியாக கர்னால் நகரத்திற்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அல்லது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். சமூக ஊடகங்களில் பொய் செய்திகளையும், தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவால், அரியானாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>