×

கேரளாவில் நிபா பாதிப்பால் பலியானசிறுவனின் உறவினர்கள் 38 பேருக்கு அறிகுறி: அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதி

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் நிபா பாதிப்பால் மரணமடைந்த சிறுவனுடன் தொடர்பு இருந்தவர்களின் எண்ணிக்ைக 251ஆக உயர்ந்துள்ளது. இதில் நிபா வைரஸ் அறிகுறி இருந்த 38 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றின் ேவகம் இன்னும் குறையாமல் தினமும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இந்த நிலையில் நிபா வைரசும் நாளுக்கு நாள் மிரட்டத் தொடங்கி உள்ளது. கோழிக்கோடு அருகே சாத்தமங்கலம், பழூர் பகுதியை சேர்ந்த அபூபக்கர்- வாஹிதா தம்பதியின் 12 வயது மகன் முகம்மது ஹாசிம் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அதைத் தொடர்ந்து சிறுவனின் தாய் வாஹிதா, சிறுவனுக்கு சிகிச்சை அளித்த 2 நர்சுகளுக்கு நிபா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டது. 3 பேரும் உடனே கோழிக்கோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சிறுவனுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உள்பட 188 பேர் சுகாதாரதுறையினர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர். சாத்தமங்கலம் கிராமத்தை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோழிக்கோட்டை அடுத்து உள்ள கண்ணூர், மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களிலும் நிபா வைரசை தடுக்க, சுகாதார துறை அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய சுகாதார குழுவினர் கோழிக்கோட்டில் கடந்த 2 நாளாக முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் சூசன், கேரள தலைமை செயலாளர் ஜாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாவட்டங்களான கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மரணமடைந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 121 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆவர். சிறுவனின் தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களில் 38 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேரின் உமிழ்நீர், ரத்த மாதிரி ஆகியவை எடுக்கப்பட்டு, சிறுவனின் பெற்றோர் உள்பட 8 பேரின் மாதிரி புனேக்கும், 3 பேரின் மாதிரி ஆலப்புழாவுக்கும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே பலியான சிறுவன் ஹாசின் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் மரத்தில் இருந்து ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஒன்றிய சுகாதாரக்குழுவினர் நேற்று அந்த மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்த ரம்புட்டான் பழங்களை சேகரித்தனர். அதில் சில பழங்களை வவ்வால்கள் கடித்திருந்தது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவற்றை பரிசோதனைக்காக போபால் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபோல் இறந்த சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியது: கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேரின் ரத்த மாதிரி புனே மற்றும் ஆலப்புழா பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் புனேக்கு அனுப்பி வைக்கப்பட்ட 8 மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் 8 பேருக்குமே நிபா வைரஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.

Tags : Kerala , Kerala, Nipah Virus, Government Hospital
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...