×

விசாரணை அதிகாரியிடம் ஆவணங்களை காட்ட மறுத்த அதிமுக பஞ்சாயத்து தலைவி

அன்னூர்: முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற அதிகாரிக்கு அதிமுக ஊராட்சி தலைவர் ஆவணங்களை காட்ட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அன்னூர் கஞ்சபள்ளி ஊராட்சி தலைவராகவும், அதிமுக வடக்கு ஒன்றிய இணை செயலாளராகவும் இருப்பவர் சித்ரா. இவரது கணவர் சுப்பிரமணியம். இவரும் அதிமுகவில் பொறுப்பில் உள்ளார். ஊராட்சி தலைவர் சித்ரா, ஊராட்சி செயலர் நாகராஜ் இருவரும் முறைகேடு செய்வதாக, துணைத்தலைவர் வசந்த் மற்றும் 6 வார்டு உறுப்பினர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இது குறித்து விசாரிக்கும்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் தணிக்கை மதுரா தலைமையில்,​ துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, முத்துராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் கஞ்சபள்ளி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்,``வீட்டுமனை அங்கீகாரத்துக்கு வரும் பொதுமக்களிடம், அரசு நிர்ணயித்ததை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு மடங்கு கட்டணத்திற்கு மட்டும் ரசீது தந்து, ஒரு மடங்கு கட்டணத்தை கையூட்டாக வைத்துக்கொள்கின்றனர்.

மேலும், தினமும் வசூலிக்கப்படும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், லைசென்ஸ் வரி உள்ளிட்ட வரிகளை 2 அல்லது 3 மாதங்களுக்கு  சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திவிட்டு, அதன் பிறகே அரசுக்கு செலுத்துகின்றனர். பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் குறைகள் குறித்து தெரிவித்தால், ஊராட்சி தலைவரும், அவரது கணவரும் மிரட்டும் பாணியில் பேசுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தில் தலைவருடைய கணவர் சுப்பிரமணியமும் தலையிடுகிறார்’’ என்றனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரியான மதுரா, ஊராட்சி தலைவரிடம் கேட்ட போது, ஒரு சில விளக்கங்களை மட்டும் அளித்துவிட்டு மற்ற கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்தார். இது சம்பந்தமாக அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருமாறு விசாரணை அதிகாரி கேட்ட போது, ஒரு சில ஆவணங்கள் மட்டும் உள்ளன. மற்ற ஆவணங்கள்  இல்லை என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விசாரணை அதிகாரி மதுரா, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



Tags : Madhya Panchayattu Mavi , Investigating Officer, Documents, AIADMK, Panchayat Leader
× RELATED ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட...