×

நாகையில் கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியல்!: போக்குவரத்து கடும் பாதிப்பு..!!

நாகை: கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தி நாகையில் நடந்த மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரை பகுதிகளில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இப்பணி மந்தமாக நடப்பதால் வடக்கு பகுதியில் 150 மீட்டர் ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள், மின் கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்தால் நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குட்பட்டனர்.

இதனிடையே கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆட்சியர் ஜெய சித்ரா கலா உறுதியளித்ததை தொடர்ந்து 2 மணி நேரமாக நடைபெற்ற மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Tags : Nagle , Dragon, sea erosion, fishermen, road block
× RELATED நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம்...