×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆய்வு நாளொன்றுக்கு யானைகள் 15 கி.மீ. நடக்க வேண்டும்-ஆராய்ச்சியாளர் தகவல்

மன்னார்குடி : தமிழகத்தில் கோயில்கள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகளின் உடல் நிலை மற்றும் யானைகள் பராமரிக்கப்படும் நிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள செங்கமலம்(33) என்ற பெண் யானையை மாநில வனவிலங்கு குழு உறுப்பினரும் மாநில யானைகள் ஆராய்ச்சியாளருமான மயிலாடுதுறையை சேர்ந்த டாக்டர் சிவகணேசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

யானை 5 நிமிடத்துக்கு ஒரு முறை உட்கொள்ளும் இரையின் அளவு, பாகன் சொல்வதை யானை புரிந்து கொள்ளும் திறன், யானையின் கண், காது, வால், கால் போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு போன்றவை குறித்து ஆய்வு செய்து யானையின் விபரங்கள் குறித்து யானை பாகன் ராஜகோபாலனிடம் விசாரித்தார். ஆய்வின்போது, செயல் அலுவலர் சங்கீதா, கோயில் மேலாளர் நாகம்மாள், கிளார்க் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து மாநில வன விலங்கு குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் கூறுகையில், யானையின் ஆரோக்கியம், என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. யானையின் எடை மற்றும் உடற்கூறுகள் எவ்வாறு உள்ளது. யானைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தேன். கோயில்கள் மற்றும் அதன் வளாக பகுதிகளில் யானையை வைத்துக்கொள்ள கூடாது என அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் நந்தவனம் ஒன்றை உருவாக்கி அங்கு யானைக்கு தேவையான தங்குமிடம், புதிய நீர்த்தொட்டி, யானைகள் உண்ணக்கூடிய புல் வகைகளை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும். நாளொன்றுக்கு யானைகள் குறைந்தபட்சம் 15 கிமீ நடக்க வேண்டும். எனவே அதற்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

யானை பாகன் மற்றும் உதவி பாகன் ஆகியோர் யானைகள் இருக்கும் இடத்தில் தங்க உரிய வசதி செய்து தரவேண்டும். யானைகள் சுகந்திரமாக சுற்றித்திரிகிற வகையில் அந்த இடம் அமைய வேண்டும். இவை அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிகளாக கூறியுள்ளது. மேற்கண்ட வசதிகள் ஒவ்வொரு கோயில்களிலும் உள்ளதா என்பது குறித்து அந்தந்த கோயில்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு அது குறித்து ஆய்வறிக்கையை சமர்பிப்போம் என்றார்.

Tags : Rajagopala Swami Temple ,Mannarukudi , Mannargudi: The physical condition of temples and privately owned elephants in Tamil Nadu and
× RELATED பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி...