அலறும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் அரசடி சாலையா? ஆளை விடுங்க சாமி... குண்டும் குழியுமாக உள்ளதால் உள்ளே வர மறுப்பு

இளையான்குடி : இளையான்குடி அருகே அரசடி சாலை படுமோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் வர மறுக்கின்றனர்.இளையான்குடி ஒன்றியம், விரையாதகண்டன் ஊராட்சிக்கு உட்பட்ட அரசடி, அரசடி காலனி, கரைமேல்குடியிருப்பு ஆகிய கிராமமக்கள் வடுகை விலக்கிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து இல்லாததால், மாணவர்கள், விவசாயிகள், சைக்கிள் மற்றும் டூவீலரிலும் பெரும்பாலும் நடப்பதற்கே பயன்படுத்தி வருகின்றனர்.

கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலை பாதசாரிகளின் பாதங்களை பதம் பார்க்கிறது. கரடுமுரடான சாலையால் சைக்கிள் மற்றும் டூவீலர் டயர்களை பஞ்சர் ஆக்கிவிடுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆபத்து காலத்திற்கும், அவசரத் தேவைக்கும் ஆட்டோ, வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர மறுக்கின்றனர்.

எப்போதாவது பொருட்கள் விற்பனை செய்வதற்கு மட்டும் அத்திபூத்தார்போல வாகனங்கள் தெரியாமல் வருகின்றன. இதனால் அரசடி, அரசடி காலனி, கரைமேல்குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசடிக்கு புதிய தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமமக்கள் கூறுகையில், ‘‘அரசடி சாலை 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படவில்லை. தார்ச்சாலை என்ற அடையாளத்தை இழந்து கற்கள் நீட்டிக்கொண்டு கிடக்கின்றன. இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் எந்த ஆட்டோவும், காரும், வேனும் வருவதில்லை. இதனால் கடும் சிரமமடைந்து வருகிறோம். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

More
>