×

சுற்றுலா பயணிகள் அவதி கம்பன் நினைவிட சாலை ‘கரடுமுரடு’-உடனே சீரமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை : கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாய் உள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் இருந்து கருதுப்பட்டி, கண்டனிப்பட்டி வழியே காளையார்கோவில் செல்லும் சாலை உள்ளது. நாட்டரசன்கோட்டையில் இருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இணையும். நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 4 கி.மீ தூரமுள்ள இந்த சாலை கடந்த 22 ஆண்டுக
ளுக்கு முன் போடப்பட்டது.

மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சாலையாக மாற்றப்பட்ட பின்னர் எவ்வித பராமரிப்பும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. நாட்டரசன்கோட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழிதான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்வரை நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ தூரம் காளையார்கோவில் யூனியன் சாலையாகவும் உள்ளது.

இதில் பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் நாட்டரசன்கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவிடம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலையில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலையாக இருந்தது. பல ஆண்டுகளாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுதடைந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட்டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Avadi Kamban Memorial Road , Sivagangai: The road leading to the Kamban Memorial has been in a state of disrepair for many years. Near Sivagangai
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை