×

ஈரோடு, பொள்ளாச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

கோவை : பொள்ளாச்சி, ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2  மாணவிகள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  
இதேபோல், ஜமீன்புரவிபாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் ஒரு  பிளஸ் 1 மாணவிக்கும், பணிக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தனியார்  பள்ளி மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 4  மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த  மாணவர்கள் இருந்த வகுப்பறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. கொரோனா பாதித்த மாணவர்கள் படித்த  பள்ளிகள் மட்டுமின்றி மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டி   கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு   மாணவருக்கு கடந்த 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கோபி கல்வி மாவட்டம் சிறுவலூர்   மணியக்காரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு   மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதையடுத்து தொற்று உறுதியான மாணவி படிக்கும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம்   முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி வழக்கம்போல்  திறக்கப்பட்டது.

இது குறித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர்  ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மாணவிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால் அங்கு படிக்கும் மாணவிகளுக்கும்,  ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்கு  விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி திறக்கப்பட்டுவகுப்புகள்  நடத்தப்பட்டது’’ என்றார். கைதிகள் 4 பேருக்கு தொற்று: ஈரோடு தெற்கு காவல் நிலைய பகுதியில் அடிதடி வழக்கில், கைது  செய்யப்பட்ட 25 வயது வாலிபருக்கும், கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்ததாக ஆர்.எஸ். புரம் காவல் நிலைய  பகுதியில்  கைது செய்யப்பட்ட ஒருவரும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில்  அடைக்கப்பட்டனர்.

அவர்கள் 2 பேருக்கும் நேற்று  கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கும், சிறை  அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தாராபுரம்: தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம்   அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அந்தோணி மகன் பாண்டியன் (30). இவரும் அதே பகுதி   17 வயது சிறுவனும் 13 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் தொந்தரவு   செய்தனர். இது தொடர்பாக கடந்த 3ம்   தேதி இருவரும் கைது செய்யப்பட்டு கோவை   மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து எஸ்பி சசாய் சாங்   உத்தரவின் பேரில் தாராபுரம் டிஎஸ்பி தன்ராஜ் முன்னிலையில் தாராபுரம்   அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்லம் உள்பட 13 மகளிர்   போலீசாருக்கு தாராபுரம் சுகாதார வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி   தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் வந்தபின் யாருக்காவது தொற்று இருந்தால் தாராபுரம் மகளிர்   போலீஸ் ஸ்டேஷன் 3 நாட்களுக்கு மூடப்படும் என தெரிகிறது.

3 ஆசிரியருக்கு கொரோனா

திருப்பூர் நெசவாளர்  காலனி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு 3ம்  தேதி கொரோனா உறுதியானது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று பள்ளி திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வந்தனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில்  மேலும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  இப்பள்ளிக்கு இன்று 7ம் தேதி, நாளை 8ம் தேதி மற்றம் 9ம் தேதி ஆகிய 3  நாட்கள் விடுமுறைவிட்டு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Corona ,Erode, Pollachi , Coimbatore: Coronavirus infection has been confirmed in 5 school children in Pollachi, Erode. Within the corona spread band
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...