திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்-அரசின் விதிகளை கடைபிடித்து வீடுகளிலேயே கொண்டாட எஸ்பி வேண்டுகோள்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்து அமைப்புகளும், பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எஸ்பி அறிவுரை வழங்கியுள்ளார்.திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நேற்று மாலை எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இந்து முன்னணியினர், இந்து மக்கள் கட்சி, பாஜ உள்ளிட்ட இந்து அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்து அமைப்பினர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று எஸ்பி சிபி சக்கரவர்த்தி இடம் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தனர். அதன்பின் பேசிய எஸ்பி சிபி சக்கரவர்த்தி நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் பண்டிகைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலை தொற்று அதிக அளவில் தமிழ்நாட்டில் பரவி உயிரிழப்புகள் ஏற்படும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த விதிமுறைகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. தற்போது இந்து மக்களின் விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 10ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து ஊர்வலமாக சென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து கூட்டங்கள் அதிக அளவில் கூடி நோய் பரவும் சூழல் ஏற்படும் என்ற ஒரே காரணத்தினால் இந்த அரசாணை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து அதன் பின்னர் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் பகுதிகளில் கரைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கொரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்க தமிழக விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைக்க அரசு தடை உத்தரவு விதித்துள்ளது.

மக்கள் நலன் கருதி இந்து அமைப்பினர் நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை  வைக்கக்கூடாது. உங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து நீங்கள் பூஜை செய்து இந்து வழக்கப்படி அதனை அருகே உள்ள நீர் நிலைகளில் தனியாக சென்று கரைத்துக் கொள்ளலாம்.

கூட்டமாக சென்று ஊர்வலமாக கூட்டம் கூடி விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிமுறைகளை இந்து அமைப்புகளும் பொது மக்களும் மதித்து கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக நமது மாவட்டம் இருக்க வேண்டும்.அதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று எஸ்பி சிபி சக்கரவர்த்தி இந்து அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்து அறிவுரை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி நன்றி கூறினார்.

Related Stories:

>