நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவது தவறு : ராகுல்காந்தி ட்வீட்!

டெல்லி : மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 16 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று இன்னும் குறையவில்லை. தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. இதுபொன்ற சூழலில் நீட் தேர்வை நடத்துவது என்பது சாத்தியமில்லை. அதனால் நடப்பாண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்துவதற்கான அனைத்து வேலைகளையும் தேசிய தேர்வு முகமை செய்துள்ளது. அதனால் ஒரு சில மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதும் இந்த தேர்வை ஒத்தி வைக்க முடியாது’’ என தெரிவித்து, அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதனால் வருகிற 12ம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கண்மூடித் தனமாக நடந்து கொள்வது துயரமானது என்றும் நீட் தேர்வை ஒத்திவைத்தால் மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>