வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் எஸ்பிஐ டெபாசிட் மெஷினில் பணம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: தமிழக உள்துறைக்கு மாநகர காவல்துறை கடிதம்

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் பணம் கொள்ளையடித்த வழக்கின் குற்றவாளிகள், பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியிருப்பதாலும், மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாலும் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தமிழக உள்துறைக்கு சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 15 இடங்களில் எஸ்பிஐ வங்கிற்கு சொந்தமான ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.1 கோடிக்கு மேல் வங்கி சர்வருக்கு தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ராயலா நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் முதன் முதலில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பெரியமேடு, கீழ்ப்பாக்கம், தரமணி, பீர்க்ன்காரணை என 7க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் எஸ்பிஐ வங்கி மேலாளர்கள் அடுத்தடுத்து இந்த நூதன மோசடி குறித்து புகார் அளித்தனர். அதைதொடர்ந்து, போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில்  அரியானா மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று 9 தனித்தனி குழுக்களாக பிரிந்து கொரோனா ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, புதுச்சேரியில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. பின்னர் கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலம் சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் சவுக்கத் அலி, நஜீம் உசேன், அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத் ஆகிய 4 பேரை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேநேரம் எஸ்பிஐ வங்கி ஜப்பான் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட இயந்திரத்தில் மட்டும் தான் இந்த நூதன திருட்டு நடந்துள்ளது. மேலும், இந்த நூதன திருட்டு உத்தரபிரதேசம், பீகார் உட்பட பல்ேவறு மாநிலங்களில் நடந்துள்ளது. எனவே சென்னை மாநகர காவல் துறையில் உள்ள எஸ்பிஐ வங்கி கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றலாம் என்று உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். அதில், பல்வேறு மாநிலங்களில் இந்த மோசடி நடந்துள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் தான் நடந்துள்ளது. வங்கி அதிகாரிகள் துணை இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை.

எஸ்பிஐ வங்கியின் ரகசிய குறியீடு இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளும் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இந்த மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாம் என்று உயர் காவல் துறை அதிகாரிகள் கருத்து கூறியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக உள்துறை செயலாளருக்கு மாநகர காவல் துறை சார்பில் பரிந்துரை கடிதம் ஒன்று அளிக்கப்பட உள்ளது.

Related Stories: