×

இங்கிலாந்துடன் 4வது டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி: 2-1 என முன்னிலை பெற்றது

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 3வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 290 ரன் குவித்தது. இதையடுத்து, 99 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 466 ரன் குவித்து ஆட்டமிழந்தது. ரோகித் 127, ராகுல் 46, புஜாரா 61, கோஹ்லி 44, பன்ட் 50, ஷர்துல் 60, உமேஷ் 25, பும்ரா 24 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 31, ஹமீத் 43 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். அதன் பிறகு, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். பர்ன்ஸ் 50, ஹமீத் 63, கேப்டன் ஜோ ரூட் 36, வோக்ஸ் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர் (2 பேர் டக் அவுட்). இங்கிலாந்து அணி 92.2 ஓவரில் 210 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ராபின்சன் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் உமேஷ் 3, பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 157 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் செப். 10ம் தேதி தொடங்குகிறது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Tags : India ,England , India win 4th Test against England 2-1
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!