×

கொரோனா விதிமீறல் பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் நிறுத்தம்

சா பாலோ: பிரேசில் - அர்ஜென்டினா அணிகளிடையேயான பிபா உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டம், சில வீரர்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காததால் 7வது நிமிடத்திலேயே நிறுத்தப்பட்டது. பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் உள்ள நியோ குய்மிகா அரங்கில் நடக்க இருந்த இப்போட்டி, கால் பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தலைசிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் ஜூனியர் (பிரேசில்) மோதும் ஆட்டம் என்பதால் உலக அளவிலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில், திடீரென களத்துக்குள் வந்த பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் போட்டியை நிறுத்தினர். அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றிருந்த எமிலியானோ புவண்டியா, ஜியோ லோ செல்சோ, கிறிஸ்டியன் ரொமேரோ, எமிலியன் மார்டினஸ் ஆகிய 4 வீரர்கள், ஹோட்டலில் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கவில்லை என்றும், கொரோனா விதிமீறலுக்காக அவர்களை உடனடியாக பிரேசிலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசில் நாட்டு கொரோனா விதிகளின் படி இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 10 நாள் குவாரன்டைன் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 4 வீரர்களும் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக பிரேசில் வந்து அர்ஜென்டினா அணியில் இணைந்ததே பிரச்னைக்கு காரணம். மெஸ்ஸி, நெய்மர் இருவரும் அதிகாரிகளை சமாதானம் செய்து போட்டி தொடர்ந்து நடைபெற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அதிகாரிகள் பிடிவாதமாக இருந்ததால் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.


Tags : Corona ,Brazil ,Argentina , Corona violation Brazil-Argentina match suspension
× RELATED அர்ஜெண்டினாவில்...