ரூ.200 கோடி மோசடி வழக்கில் சுகேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைது: டெல்லி போலீசார் அதிரடி

புதுடெல்லி: ரூ.200 கோடி பண மோசடி வழக்கில், சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை சிலை சின்னத்தை பெற்று தர, டிடிவி.தினகரன் தரப்பிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசி, டெல்லியில் உள்ள ஓட்டலில் ரூ.2 கோடி லஞ்சமாக பெற முயன்றபோது இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி ரோகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், சிறையில் இருந்தபடியே டெல்லி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர்களிடம் பல்வேறு வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிப்பதாக கூறி ரூ.200 கோடி வரை மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இந்த பணத்தில் சென்னை கானத்தூரில் சுகேஷ் ஆடம்பர சொகுசு பங்களா வாங்கி இருந்தார்.

அந்த வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 16 சொகுசு கார்கள், ரூ.86 லட்சம் ரொக்க பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடியில் உடந்தையாக இருந்த சுகேஷின் மனைவியும், நடிகையுமான லீனா மரியா பாலை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு நேற்று முன்தினம் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இதே வழக்கில் சுகேஷின் நான்கு கூட்டாளிகளை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கைதாகி உள்ளனர். இதில், கமலேஷ் கோத்தாரி மூலம் சுகேஷ், லீனா ஆகியோர் சென்னையில் ஆடம்பர பங்களாவை வாங்கி உள்ளனர். சாமுவேல் லீனாவின் மேலாளராக வேலை செய்தார். அருண் முத்து சுகேஷுக்கு சொகுசு கார்கள் வாங்க உதவினார். மோகன்ராஜ் சுகேஷின் நீண்டகால வழக்கறிஞர் ஆவார்.

Related Stories:

>