மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க பழவேலி - மாமண்டூர் இடையே பாலாற்றில் தடுப்பணை: வரலட்சுமி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில்  மானியக்கோரிக்கை விவாதத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி பேசியதாவது: செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியை தூர்வார வேண்டும். மேலமையூர் ஏரியில் இருந்து கொளவாய் ஏரிக்கு செல்லும் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொளவாய் ஏரியில் படகு சேவை அமைத்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.

இதனை தடுக்க, செங்கல்பட்டு பழவேலி-மாமண்டூர் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டி குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும். செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி உள்ளதால், மாவட்ட தலைநகராக விளங்கும் செங்கல்பட்டு நகராட்சியில் அனைத்து துறைகளின் மாவட்ட அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செங்கல்பட்டு நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு புறவழி சாலையில் பழவேலிக்கு அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

மறைமலை நகர் நகராட்சியில் 273 தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் இருந்து வரும் கழிவுநீரை மறைமலை நகர் நின்னகரை ஏரி, பொத்தேரி ஏரியில் கொட்டி அசுத்தம் ஆக்குகின்றனர். எனவே, இந்த வணிக நிறுவனங்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமலை நகர் நகராட்யில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்ல, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் அமைத்து தர வேண்டும். சிங்கபெருமாள் கோயில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பொதுமக்கள் கடந்து மறுபக்கம் செல்லும் போது நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க சென்னையில் உள்ளது போல சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். மருத்துவ கல்லூரிக்கு தேவையான இதய அறுவை சிகிச்சை, நிபுணர்கள் நியமிக்க வேண்டும், என்றார்.

Related Stories: