2021-22ம் ஆண்டிற்கு பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

சென்னை: பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தை 2021-22ம் ஆண்டில் செயல்படுத்த ரூ.490.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் ஆர்.காந்தி கூறியிருப்பதாவது: வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் 1983ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள 14 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 54 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் ஆகியோருக்கு தொடர் வேலைவாய்ப்பு அளித்தல் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சேலைகள் மற்றும் வேட்டிகள் அளித்தல் ஆகிய இரு நோக்கங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் 2021 திட்டத்திற்கு ரூ.490.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 180.42 லட்சம் சேலைகள் மற்றும் 180.09 லட்சம் வேட்டிகள் ரூ.517.42 கோடி மதிப்பிற்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-22ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.490.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசாணை எண் 85, நாள் 28.7.2021ன் படி, பொங்கல் 2022 வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல் தவணைத் தொகை ரூ.157.38 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>