6 மாதங்களுக்கு முன்பே திட்டங்கள் வகுத்து மாணவர்களுக்கு லேப்டாப்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று, நாகைமாலி (மார்க்சிஸ்ட்) கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, ‘‘கடந்த 2017-18ம் ஆண்டு 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்து பேசியதாவது: 2011ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 45,71,675 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதற்காக ரூ.6349.63 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2017-18ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்ட மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டு 11ம் வகுப்பு பயின்ற 4,97,028 மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய மடிக்கணினிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயின்று வரும் 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. 2017-18ம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய நிலுவை 1,75,789 என மொத்தம் 11,72,817 மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் முடிப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இனி வரும் காலங்களில் கல்வியாண்டு தொடக்கத்திலே அதாவது, 6 மாதங்களுக்கு முன்பே திட்டங்கள் வகுத்து உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

Related Stories:

>