கதர் நூற்போர் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்பு:

* திருவண்ணாமலை நகரில், திருமஞ்சன கோபுர வீதியில் தரைத்தளம் 769.49 சதுர அடி மற்றும் முதல் தளம் 769.40 சதுர அடி ஆக மொத்தம் 1538.80 சதுர அடி கொண்ட கதர் அங்காடி கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அக்கட்டிடத்தை சீரமைத்து நவீனப்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது. இக்கட்டிடம் ரூ.44 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.

* கதர், பாலிவஸ்திரா மற்றும் பட்டு ரகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம் ரூ.20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும்.

* கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம் செயல்படாமல் செயலிழந்து இருப்பதை கருத்தில் கொண்டு வாரியத்திற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்து, உறுப்பினர் அட்டை வழங்கி, அவர்களுக்கு நலத்திட்ட நிதியுதவி வழங்கிடவும், நூற்பு மற்றும் நெசவு பணி தன்மைக்கு ஏற்ப புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திடவும், புதிதாக அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்து நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராமப் பொருட்களுக்கான புதிய மேலுறைகள் மற்றும் பட்டு புடவைகளுக்கு அட்டை பெட்டிகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.5.10 லட்சம் செலவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தச்சு கருமார அலகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, அலுவலக அறை புதுப்பிக்கப்படும்.

* ரூ.15 லட்சம் செலவில், கதர் பட்டு நெசவாளர்களுக்கு நவீன முறையில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* ரூ.16 லட்சம் செலவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆகிய இரு  சோப்பு அலகுகளில் தானியங்கி சோப்பு வெட்டும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

* ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட பனை பொருள் விற்பனை கூட்டுறவு சம்மேளன வளாகத்தில் பனை வெல்லம் உற்பத்தி செய்திட பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* பனை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளதோடு, தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு பனஞ்சர்க்கரை, பனை வெல்லத்தூள் மற்றும் பனங்கிழங்கு தூள் போன்ற பனை பொருட்களை கொள்முதல் செய்து சந்தைப்படுத்திட சென்னை எழும்பூர், கடலூர் ஆகிய இடங்களில் மக்களை கவரும் வகையில் அழகிய வடிமைப்புடன் கூடிய சிறிய பைகளில் பனை பொருட்களை அடைத்து விற்பனை செய்ய தேவையான நவீன இயந்திரங்கள் ரூ.16.50 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

Related Stories:

>