×

போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வணிகர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பு தேர்வுகளும், போலி பட்டியல் தயாரிப்புகளும் வணிகர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் உரிய நேரத்தில் முறையாக கிடைக்காத நிலையில் தொடர்ந்திருந்தது. பதிவுத்துறையிலும் போலி ஆவணங்களின் மூலம் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் நடந்தது பொதுமக்கள் அதிருப்தி கொண்டிருந்த நிலையிலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்டது. எனவே முதல்வர் உத்தரவுபடி இவ்விரு துறைகளையும் சீர்படுத்த போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை உரிய அளவில் செலுத்தினால். அரசுக்கு வருவாய் மேலும் உயர வாய்ப்புள்ளது.

நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இத்துறையில் மொத்தம் ரூ.36,261 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டில் பெறப்பட்ட வருவாய் ரூ.28,458 கோடியாகும். இதன் மூலம் ரூ.7,803 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. வணிகவரித்துறையில் புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக வரி செலுத்தும் வணிகர்களின் குறைகளையும் ஆலோசனைகளையும் அவர்களின் தேவைகளையும் நேரடியாக கண்டறிய வேண்டியிருந்தது.
கடந்த ஆட்சி காலத்தில் போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, போலி பட்டியல் தயாரிப்பவர் உட்பட அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குண்டர் சட்டத்தில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல், அங்கீகாரமற்ற மனைகள் பதிவு போன்ற பெருந்தவறுகள் பெருவாரியாக நடந்துள்ளதாக அரசு பதவி ஏற்றவுடன் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற பதிவுகளை சரி செய்வது மேலும் இத்தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை பதிவுத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆவணங்கள் போலியாக பதியப்பட்டது என அறிய வந்தாலும் அதை துறை ரீதியாக ரத்து செய்ய முடியாது என்ற நிலை, உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பதிவு சட்டம் 1908ல் உரிய சட்ட திருத்தம் கொண்டு வரவும் அதன் மூலம் போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைக்கு வழங்கவும் பேரவையில் கடந்த 2.9.2021 அன்று சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு அன்றே நிறைவேற்றப்பட்டது. பதிவு அலுவலர்களில் சிலர் போலி ஆவணப்பதிவிற்கு கடந்த காலங்களில் உடந்தையாக இருந்துள்ளனர். இதை மாற்றுவதற்கு பதிவு சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்துகளின் உண்மையான உரிமையாளர்களிடம் அவர்களது சொத்துகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.

சொத்துகளை பதிவு செய்யும் போது வழிகாட்டு மதிப்பை குறைத்து காட்டியும் அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாயை ஏய்க்கும் நோக்கத்துடன் சொத்தின் அமைவிடத்தை மாற்றி எழுதியும் கூட கடந்த காலங்களில் பல முறைகேடுகள் நடந்தேறியுள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்கள் மனை நிலங்களாகவும், மனை நிலங்கள் விவசாய நிலங்களாகவும் அவசர கதியில் தவறுதலாக வகைப்படுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் சொத்துகளை வாங்கவும் முடியாமல், விற்க முடியாமல் திணறினர்.

இதை சீரமைக்கும் வகையில் உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்படும். போலி ஆவணங்கள் கண்டறியப்படும் போது, அவற்றை தயாரித்ததாக கையொப்பம் இட்டுள்ள ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் குறித்து விசாரிக்கும் போது போலி என ெதரிய வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஆவணத்தை தயார் செய்யும் ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரின் ஒளிவருடல் செய்யப்பட்ட புகைப்படத்தையும், அவரது உரிம எண் அல்லது பார்கவுன்சில் பதிவு எண்ணை ஆவணத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

Tags : Minister ,P. Murthy , Appropriate legislation will be enacted to crack down on traders who make fake lists and cause losses to the state: Minister P. Murthy
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...