×

வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் மஸ்தான் தகவல்

சென்னை: வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பாபநாசம் ஜவாஹிருல்லா (மமக) பேசியதாவது: வக்பு வாரிய ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் வக்பு வாரிய சொத்துகளை வகை மாற்றம் செய்து அதனை விற்பனை செய்யும் வகையில் தடையில்லா சான்றிதழ் வழங்கி சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வக்பு வாரிய தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அந்த குழு மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மஸ்தான்: ஏற்கனவே நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல அரசு பொறுப்பேற்று அண்மை காலத்தில் மட்டும் சென்னை நந்தனத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 800 சதுர அடி வக்பு வாரிய நிலமும், சென்னை ஜேஜே கான் சாலையில் ரூ.4 கோடி மதிப்பிலான 2,500 சதுர அடி நிலமும், ரூ.12 கோடி மதிப்பிலான 14 ஆயிரத்து 750 சதுர அடி நிலம் திருச்சியில் இருந்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் வக்பு வாரியத்தின் நடவடிக்கை மூலமாக மீட்கப்பட்டு இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Waqf Board ,Minister Masdan , Action to reclaim lands owned by Waqf Board: Minister Masdan Information
× RELATED கட்டிமேடு ஆதிரெங்கம் புதிய ஜமாத் மன்ற நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு