தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து தடையில்லை: கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து தடை இல்லை, அப்படி ஒரு மாநிலத்தை பிரித்து பார்க்க முடியாது. கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு, தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி, துணை ஆணையர் சரண்யா அரி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் ஜிகா, நிபா ஆகிய புதிய வைரஸ்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடவும் கூடுதலான தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12ம் தேதி எல்லைப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஆய்வு செய்ய  இருக்கிறேன். தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து தடை இல்லை. அப்படி ஒரு மாநிலத்தை பிரித்து பார்க்க முடியாது. கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்படும். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் பேருந்து, விமானத்தில் இருந்து வருபவர்கள் பரிசோதனை, 2  தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories:

>