விசாரணை அமைப்பு முன் அபிஷேக் ஆஜர்; சுவேந்து டிமிக்கி

கொல்கத்தா: மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.யாக இருந்த போது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த மாநில ஆயுதப்படை போலீஸ் சுப்ரதா சக்ரவர்த்தி, கடந்த 2018ல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராக மாநில சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கட்சி பணியால் தன்னால் விசாரணைக்கு வர முடியாது என்று இ-மெயில் மூலம் சுவேந்து தெரிவித்து விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே, சிஐடி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சுவேந்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் மீது கைது நடவடிக்கை வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல, திரிணாமுல் காங்கிரசின் பொது செயலாளரும் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அவர் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவர், ``அதிகாரிகள் தங்கள் கடமையை செய்கின்றனர். முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,’’ என்று கூறினார்.

Related Stories: