×

கேரளாவில் பலியான சிறுவனுக்கு ரம்புட்டான் பழத்தால் நிபா வைரஸ் பரவியதா? ஒன்றிய சுகாதார குழு ஆய்வு

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் வவ்வால் கடித்த ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதால்தான் சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்கி இறந்தானா என்பது குறித்து ஒன்றிய சுகாதார குழு ஆய்வு செய்து வருகிறது. புனேவில் இருந்து புதிய நிபுணர் குழுவும் கோழிக்கோடு விரைந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரசுக்கு மத்தியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. கோழிக்கோடு அருகே சாத்தமங்கலம், பழூர் பகுதியை சேர்ந்த அபூபக்கர் -வாஹிதா தம்பதியின் 12 வயது மகன் முகம்மது ஹாசிம். நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே சிறுவனின் தாய் வாஹிதா மற்றும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த 2 நர்சுகளுக்கு நிபா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டது. அவர்கள் 3 பேரும் உடனே கோழிக்கோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் அவர்களை 24 மணி நேரமும் காண்காணித்து வருகின்றனர். இது தவிர சிறுவனுடன் தொடர்பில் இருந்த சாத்தமங்கலத்தை சேர்ந்த உறவினர்கள் உள்பட 188 பேர் சுகாதாரதுறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் 20 பேரை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே சாத்தமங்கலம் கிராமத்தை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோழிக்கோடை அடுத்து உள்ள கண்ணூர், மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களிலும் நிபா வைரசை தடுக்க, சுகாதார துறை அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோழிக்கோட்டில் 2 நாட்களாக முகாமிட்ட ஒன்றிய குழுவினர் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே புனேவில் இருந்தும் ஒரு நிபுணர் குழு கோழிக்கோடு வர உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஸ் கூறுகையில், ‘‘நிபா எங்கிருந்து பரவியது என்பது குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட ஆய்வின் படி வவ்வால் கடித்த ரம்புட்டான் பழத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று ஒன்றிய சுகாதாரக்குழு கருதுகிறது’’ என்றார்.

மலேசியாவில் துவங்கிய பாதிப்பு
* முதன்முதலில் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவின் ஈப்போ அருகே பன்றி பண்ணையில்தான் நிபா வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது. இங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் தான் நிபாவால் முதலில் பாதிக்கப்பட்டனர்.
* நிபா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் ேகரளாவில் கடந்த 2018 ேம மாதத்தில் பேராம்பர சங்கரோத் பஞ்சாயத்தில் பதிவானது. அப்போது 20 பேர் நிபா வைரஸ் தாக்கி இறந்தனர்.
* இந்தியாவில் மே.வங்க மாநிலம் சிலிகுரியில் 2001ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. இதில் 45 பேர் உயிரிழந்தனர். அதற்குப்பின் அண்டை நாடான வங்கதேசத்தில் 2011ம் ஆண்டு பரவிய நிபா வைரசால் 50 பேர் இறந்தனர்.
* நிபா வைரஸ் வவ்வால்கள், பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும். சுகாதாரமற்ற உணவுகளாலும் நிபா வைரஸ் மனிதர்களிடம் பரவும். நிபா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசியோ, உரிய சிகிச்சை முறைகளோ இதுவரை இல்லை. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, தொண்டைப்புண் போன்றவை நிபா காய்ச்சல் அறிகுறிகளாகும். பழந்தின்னி வவ்வால்களால் நிபா வைரஸ் பரவும் என்பதால், பழங்களை நன்றாக சுத்தம் செய்து உண்ண வேண்டும். பன்றிப் பண்ணைகளில் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

* 11 பேருக்கு அறிகுறி?
கண்காணிப்பில் இருக்கும் 188 பேரில் மேலும் 11 பேருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால் அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Union Health Committee , Rambutan fruit spreads Nipah virus to boy killed in Kerala? Union Health Committee study
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...