×

முழு ஆப்கானும் கட்டுப்பாட்டில் வந்தது பஞ்சஷிரை கைப்பற்றியது தலிபான்: ஆட்சி அமைக்கும் விழாவுக்கு பாக்., சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு

காபூல்: தேசிய கிளர்ச்சி படையுடன் சண்டையிட்ட தலிபான்கள் படை பஞ்சஷிர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முழு ஆப்கானும் தலிபான்கள் வசம் வந்து விட்டதால், விரைவில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆட்சி அமைக்கும் விழாவுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதும், தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றினர். அரசு படை தலிபான்களிடம் சரணாகதி அடைந்தது.

ஆனாலும், காபூலில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பஞ்சஷிர் மாகாணம் மட்டும் அடிபணியாமல் இருந்தது. அங்கு, தலிபான் எதிர்ப்பு படையான தேசிய கிளர்ச்சி படையை அகமது மசூத் வழிநடத்தி வந்தார். மேலும், தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்ட முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேவும் கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக இருந்தார். பஞ்சஷிரை கைப்பற்ற ஆயிரக்கணக்கான தலிபான்கள் கடந்த சில நாட்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பஞ்சஷிரின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் நேற்று முழு பஞ்சஷிரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அறிவித்தனர். அங்கு தலிபான் கொடியை ஏற்றினர். இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபைதுல்லா முஜாகித் தனது டிவிட்டரில், ‘‘கூலிப்படை எதிரிகளின் கடைசி மாகாணமான பஞ்சஷிரும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது’’ என்றார். இதனை கிளர்ச்சிப் படை மறுத்தாலும், அகமது மசூத், அமருல்லா சலே எங்கிருக்கிறார்கள் என்ற தகவலும் தெரியவில்லை.

தலிபான்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் ஆட்சி செய்தால் ஒத்துழைக்க தயார் என ஏற்கனவே கிளர்ச்சிப் படை கூறியிருந்தது. இந்நிலையில், பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்கள், கிளர்ச்சிப் படையில் உள்ளவர்களும் தலிபான் படையில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் மீது பாரபட்சம் காட்ட மாட்டோம் என்றும், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற ஆப்கான் ராணுவ வீரர்களும் தலிபான் படையில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சஷிர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தயாராகி விட்டனர். இந்த பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஈரானுக்கு தலிபான்கள் அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

* பிணைக்கைதிகளாக அமெரிக்க மக்கள்
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், மஜார் இ ஷெரிப் நகரில் இருந்து 4 விமானங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேற தயாராக இருந்தனர். விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் அவர்களை தலிபான்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. உரிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் அவர்கள் தடுக்கப்பட்டதாக காபூல் தரப்பு செய்திகள் கூறுகின்றன. ஆனால், விமானத்தில் பல அமெரிக்க மக்கள் உரிய ஆவணத்துடன் இருந்ததாகவும், தற்போது அவர்களை தலிபான்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்பி மைக்கேல் மெக்கால் குற்றம்சாட்டி உள்ளார்.

* அகமது மசூத் பரபரப்பு பேட்டி
இதற்கிடையே, கிளர்ச்சிப் படை தலைவர் அகமது மசூத் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘பஞ்சஷிரில் எங்கள் படைகள் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவம், தலிபான்களுக்கு நேரடியாக உதவுகிறது. இதை சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பஹிம் தஷ்டியையும் எனது குடும்பத்தினர் பலரையும் கொன்றுள்ளனர். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன்’’ என கூறி உள்ளார்.

* பாகிஸ்தான் செய்த உதவி
ஏற்கனவே தலிபான்களுக்கு பல வழிகளில் பாகிஸ்தான் உதவி வருகிறது. கிளர்ச்சிப் படைக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் தனது வீரர்களை அனுப்பி வைத்தது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் பஞ்சஷிரில் தேடுதல் வேட்டைப் பணியில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர், காபூல் சென்று கிளர்ச்சிப் படையுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா தனது பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தை விரிவுபடுத்த தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. சீனாவை தங்களின் முக்கிய கூட்டாளியாக தலிபான்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

* குடும்பத்தார் கண்முன் கர்ப்பிணி சுட்டுக்கொலை
பஞ்சஷிரில் தேசிய கிளர்ச்சிப் படையின் செய்தித் தொடர்பாளர் பஹீம் தஷ்டியை தலிபான்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், ஆப்கானின் குரா மாகாணம் பெரோஸ்கோ பகுதியில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி பானு நெகர் என்பவரை, அவரது கணவர் மற்றும் குழந்தைகளின் முன்னால் தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொலையான பெண் போலீஸ், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான்களுக்கு எதிராக இருந்ததால், பெண் போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கிய தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தின் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் இதை தலிபான்கள் மறுக்கின்றனர்.

Tags : Afghanistan , Taliban seize control of Afghanistan
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி