×

ஐஎஸ்ஐஎஸ்-கே, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அச்சுறுத்தல்: சர்வதேச, கடலோர எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?: மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை ‘ரிபோர்ட்’

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ்-கே, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சர்வதேச, கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. அதனால், மாநிலங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருக்க உளவுத்துறை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, தற்போது தலிபான்கள் - தேசிய எதிர்ப்பு முன்னணி மோதல்கள் வரை ஒன்றிய அரசு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிவருகிறது. வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் அரசு உருவாகும் போது ஆயுதமேந்திய போராளிகளை ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய துணைப்  படைகளுக்கு உளவுத்துறை அனுப்பிய எச்சரிக்கையில், ஐஎஸ்ஐஎஸ்-கே, லஷ்கர்-இ-தொய்பா மற்றும்  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ வாய்ப்புள்ளது. மேலும், வெடிகுண்டு சாதனங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களை கையாளும் தீவிரவாதிகளின் கூட்டம் மற்றுமின்றி, கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பலாலும் ஆபத்துள்ளது. வெளிநாட்டினர் அடைக்கப்பட்ட சிறைகளில் உள்ள கைதிகளின் விடுதலையும் கவலை அளிக்கிறது. விவிஐபிக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சமூக ஊடக தளங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். பொய் செய்தி பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் கிரைம் காவல்துறையினர் உஷாராக இருக்க வேண்டும். தற்கொலை படை தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சர்வதேச எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை மேம்படுத்த போதுமான சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் வரவிருக்கும் மத விடுமுறை தினத்தின் போது, தீவிரவாதத் தாக்குதல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால், இஸ்ரேலிய நிறுவனங்கள் மற்றும் யூதக் குடிமக்கள் வசிக்கும் இடங்களை கண்காணிக்க வேண்டும். இஸ்ரேலிய தூதரகம் அல்லது துணைத் தூதரகம் மற்றும் அதைச் சுற்றி நாசவேலைக்கு வாய்ப்புள்ளதால், சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பணிகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுக்கு நிதி, அதிநவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்ய முன்வந்துள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ISIS-K ,Lashkar-e-toaiba ,Jaish-e-Mohammed , Terrorists, intelligence, alert
× RELATED புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு