ஆர்கானிக் விவசாயத்தை பின்பற்றி இமாச்சலப் பிரதேசத்தை ரசாயணம் இல்லாத மண்ணாக மாற்ற விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஷிம்லா : இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்  இன்று கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது, தோத்ரா க்வார் சிம்லாவில் உள்ள பொது மருத்துவமனை மருத்துவர் ராகுலிடம் பேசிய பிரதமர்,  தடுப்பூசி வீணாவதை குறைத்ததற்காகவும், சிக்கலான பகுதிகளில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்காகவும், அவரது தலைமையிலான குழுவை பாராட்டினார்.  தடுப்பூசி திட்ட பயனாளியான மாண்டி, துனாக் பகுதியைச் சேர்ந்த திரு தயாள் சிங்கிடம் பேசிய பிரதமர், தடுப்பூசியின் வசதிகள் குறித்தும் மற்றும் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை எவ்வாறு சமாளித்தது குறித்தும் கேட்டறிந்தார்.   

பிரதமரின் தலைமைக்காக, அவருக்கு பயனாளி நன்றி தெரிவித்தார்.  இமாச்சல் குழுவினரின் முயற்சிகளை பிரதமர்  பாராட்டினார்.  குல்லு பகுதியைச் சேர்ந்த ஆஷா பணியாளர் நிர்மா தேவியிடம், தடுப்பூசி திட்டத்தில் அவரது அனுபவம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். தடுப்பூசி நடவடிக்கைக்கு உதவியதில் உள்ளூர் மரபு பயன்பாடு குறித்தும் பிரதமர் பேசினார்.   இந்த குழுவினர் உருவாக்கிய உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மாதிரியை அவர் பாராட்டினார். தடுப்பூசி செலுத்த அவரது குழு நீண்ட தூரம் பயணம் சென்றது குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.  

ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த திருமதி நிர்மலா தேவியிடம், மூத்த குடிமக்களின் அனுபவம் குறித்து பிரதமர் ஆலோசித்தார். போதிய அளவிலான தடுப்பூசி விநியோகத்துக்கு, அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் இந்த பிரச்சாரத்தை ஆசிர்வதித்தனர்.  இமாச்சல பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்களை பிரதமர் பாராட்டினார். உனா பகுதியைச் சேர்ந்த கர்மோ தேவி என்பவர் 22,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளார்.  காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து பணியாற்றுவதை பிரதமர் பாராட்டினார்.  கர்மோ தேவி போன்றோரின் முயற்சிகள் காரணமாக உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் தொடர்கிறது என பிரதமர் கூறினார்.  

லாகால் மற்றும் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த திரு நாவாங் உபஷக்கிடம், அவர் எவ்வாறு தனது ஆன்மீக தலைவர் பதவியை , மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயன்படுத்தினார் என்பது குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.   

இப்பகுதியில் அடல் சுரங்கப்பாதை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.  பயண நேரம் குறைந்துள்ளதாகவும், இணைப்பை மேம்படுத்தியுள்ளதாகவும் திரு உபஷக் தெரிவித்தார். தடுப்பூசி நடவடிக்கையை  விரைவாக ஏற்றுக் கொள்ளும்  அளவுக்கு லகுல்  ஸ்பிதியை மாற்ற உதவியதற்காக, புத்த மதத்தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.  இந்த கலந்துரையாடலில்,  பிரதமர் மிகவும் தனிப்பட்ட  முறையிலும், இயல்பாகவும் நடந்து கொண்டார்.

கூட்டத்தினரிடம் பேசிய பிரதமர், 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இமாச்சலப்பிரதேசம், சாம்பியனாக உருவெடுத்துள்ளது என பிரதமர் கூறினார்.  தகுதியான அனைத்து மக்களுக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவாகியுள்ளது என அவர் கூறினார். இந்த வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் கூறினார்.  

மக்களின் உணர்வு மற்றும் கடின உழைப்பு காரணமாக, இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது என அவர் கூறினார்.  நாள் ஒன்றுக்கு 1.25 கோடி பேருக்கு சாதனை வேகத்தில் இந்தியா தடுப்பூசி செலுத்துகிறது.  இந்தியாவில் ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்.  தடுப்பூசி பிரச்சாரத்தில், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும்  பெண்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.  சுதந்திர தினத்தின்போது ஒவ்வொருவரின் முயற்சி குறித்து பேசியதை நினைவு கூர்ந்த  பிரதமர், இந்த வெற்றி அதன் வெளிப்பாடு என கூறினார்.  

தெய்வங்களின் பூமியாக இருக்கும்  இமாச்சலப் பிரதேசம், இது தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் கூட்டுறவு மாதிரியை  பின்பற்றுவதை அவர் பாராட்டினார்.

 லகால்-ஸ்பிதி போன்ற தொலைதூர மாவட்டத்தில் கூட 100 சதவீதம் பேருக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாச்சலப் பிரதேசம் முன்னணியில் இருப்பது  குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.   அடல் சுரங்கப்பாதை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த பகுதி, நாட்டின் பிற பகுதியிலிருந்து பல மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது வழக்கம்.  தடுப்பூசி முயற்சிகளை தடுக்கும், எந்த வதந்தி மற்றும் தவறான தகவல்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததற்காக இமாச்சலப் பிரதேச மக்களை அவர் பாராட்டினார். உலகின் மாபெரும் மற்றும் வேகமான தடுப்பூசி பிரச்சாரத்தை நாட்டின் கிராம சமுதாயம்  எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கு இமாச்சல் தான் சான்று என அவர் மேலும் தெரிவித்தார்.   

வலுப்படுத்தப்பட்ட இணைப்பால் சுற்றுலாத்துறை நேரடியாக பயன் பெறுகிறது என்றும், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கும் விவசாயிகளும் பயனடைகின்றனர் என பிரதமர் கூறினார்.  கிராமங்களில் இணையதள இணைப்பை பயன்படுத்தி,  இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் , தங்களின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் புதிய வாய்ப்புகள் குறித்து நாட்டுக்கும், உலகுக்கும் தெரிவிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

சமீபத்திய, ட்ரோன் விதிமுறைகளை பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த விதிமுறைகள் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் பல செயல்பாடுகளில் உதவும் என்றார்.  இது புதிய வாய்ப்புகளுக்கான கதவை திறக்கும் என பிரதமர் கூறினார்.  சுதந்திர தினத்தின் மற்றொரு அறிவிப்பையும் பிரதமர் குறிப்பிட்டார். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு ஆன்லைன் தளத்தை, மத்திய அரசு உருவாக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.  இதன் மூலம் நமது சகோதரிகள் தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.  ஆப்பிள், ஆரஞ்சு, கின்னவ், காளான், தக்காளி போன்றவற்றை நாட்டின் எந்த பகுதியிலும் அவர்களால் விற்க முடியும்.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, அடுத்த 25 ஆண்டுகளில், ஆர்கானிக் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என இமாச்சலப் பிரதேச விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களை பிரதமர் வலியுறுத்தினார்.  படிப்படியாக, நமது மண்ணை ரசாயணங்களில் இருந்து விடுவிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

Related Stories:

>