×

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி, அகவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி

சென்னை: கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி, அகவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார். சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி தொடங்கப்படும்.

2015ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்பட வில்லை. இந்த ஊதிய உயர்வு மூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் இதன்மூலமாக பயனடைவார்கள் என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.67 கோடியில் வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பெடல்தறி வேட்டி சேலைகளுக்கு தற்போது வழங்கப்படும் நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி உயர்த்தப்படும் என்று கூறியுள்ளனர்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் வழங்க வேண்டிய நிலுவை தொகை மானியத்திற்கு கூடுதலாக ரூ.160 கோடி ஒதுக்கப்படும். ஆன்லைனில் கோ-ஆப்டெக்ஸ் பொருட்கள் விற்கப்படும். ஆணையர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக குறைதீர்ப்பு மையம் நடத்தப்படும். கிராம தொழில்களை பொறுத்தவரை திருவண்ணாமலை நகரில் ரூ.45 லட்சம் செலவில் புதிய அங்காடி கட்டப்படும். ரூ.20 லட்சம் செலவில் கதர் பாலிவஸ்திரம் மற்றும் பட்டு ரகங்களை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக சமூக ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

Tags : Minister ,R. Gandhi , handloom
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...