×

'வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் வர வேண்டும்' : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு கருத்து!!!

மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது? எங்கு வைக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?  என்பது குறித்த விபரங்களை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வழக்கு போதைத்தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி, முன்பு 20 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டாலே, அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 50 கிலோ என அதிகரித்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு போதுமான அளவு காவல்துறையினரை நியமிக்கவேண்டும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் பலர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர். அவர்களை இதுபோன்ற சிறப்புப் பிரிவுகளுக்கு பணியமர்த்துகையில், நவீன தொழில்நுட்பம் குறித்து அறிந்திருப்பதால் விரைவாக குற்றவாளிகளையும் அதன் நெட்வொர்க்குகளையும் பிடிக்க ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், போதைப் பொருட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் பெரும்பாலும் குறையும். அது அரசுக்கு நல்லது. ஆகவே போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய இரு பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் தலா 100 காவல்துறையினரை கூடுதலாக வழங்க வேண்டும். இரு பிரிவுகளிலும் ஆண்டுக்கு 100 வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. இன்றைய சூழலில் ஊழலின் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில், லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை. வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

தற்போது gpay போன்ற செயலிகளை பயன்படுத்தியும் லஞ்சம் வாங்குவதாக தெரியவருகிறது. அதோடு போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய துறைகள், என தெரிவித்தார். தொடர்ந்து, போதைத்தடுப்புப் பிரிவு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்படும் வழக்குகளே போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்படும் என்பது இதன் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனத் தெரிவித்தார்.

அதேபோல மனுதாரர் தரப்பில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவில், காவல்துறையினரே குறிப்பிட்ட பகுதியை மறைத்துவைத்துக்கொண்டு, அவ்வப்போது அப்பாவிகள் மீது கணக்கு காண்பிக்கின்றனர் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அரசு தரப்பில் 2019ம் ஆண்டிற்கு பின் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எதுவும் அளிக்கப்படவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? ஒருவேளை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு அந்த கஞ்சா அனுப்பப்பட்டது நில், அதற்கான உத்தரவின் நகல் உள்ளிட்ட விவரங்களை செப்.13-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Supreme Court ,Maduro , தமிழக அரசு, உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு