யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: காலிறுதியில் மெட்வடேவ் எலினா ஸ்விடோலினா

நியூயார்க்: ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா, நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்கல்ப் மற்றும் கனடாவின் ஆகர் அலியாசிம் ஆகியோர் யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கனடாவின் லேலா ஆன்னி பெர்னாண்டஸ் மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த 4வது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் முன்னணி நட்சத்திரம் டேனில் மெட்வடேவும், இங்கிலாந்தின் டான் இவான்சும் மோதினர்.

இதில் 6-3, 6-4, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று, மெட்வடேவ் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்கல்ப், அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்மேனை 6-3, 6-4, 5-7, 5-7, 6-1 என 5 செட்களில் போராடி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 18 வயதேயான ஸ்பெயினின் இளம் வீரர் அல்காரசும் கடும் போராட்டத்திற்கு பின்னர் 5-7, 6-1, 5-7, 6-2, 6-0 என 5 செட்களில் ஜெர்மனியின் கோஜோவிஸ்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். கனடாவின் ஆகர் அலியாசிம், அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோவை 4-6, 6-2, 7-6, 6-4 என 4 செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த 4ம் சுற்றுப் போட்டியில் பெலாரசின் முன்னணி நட்சத்திரம் அரைனா சபலென்கா 6-4, 6-1 என நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 19 வயதேயான கனடாவின் இளம் நட்சத்திரம் லேலா ஆன்னி பெர்னாண்டஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 4-6, 7-6, 6-2 என 3 செட்களில் வீழ்த்தி, முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரொமேனியாவின் சிமோனா ஹாலேப்பை 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இவருடன், லேலா பெர்னாண்டஸ் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>