×

உ.பி-யில் சாத்தான் ஆட்சி நடப்பதாக கூறிய முன்னாள் ஆளுநர் மீது தேச துரோக வழக்கு

ராம்பூர்: உத்தரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியானது, சாத்தானின் ஆட்சி என்று கூறிய முன்னாள் ஆளுநர் மீது அம்மாநில போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் ஆளுநருமான அஜீஸ் குரேஷி, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அசம் கானின் குடும்பத்தினரை சந்திக்க நேற்று ராம்பூர் வந்தார். அவர், அசம்கானின் குடும்பத்தினரை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அசம் கானுக்கு இந்த அரசாங்கம் (பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்) செய்த கொடுமைகள், சித்திரவதைகளை நான் சொல்லி எதுவும் தெரிய வேண்டியதில்லை. அசம் கான் மீது ஒன்றன் பின் ஒன்றாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினருக்கு தைரியம் கூற வந்தேன்.

உத்தபிரதேசத்தில் நடப்பது ஒரு சாத்தானின் ஆட்சி. இந்த ஆட்சியானது சாத்தானுக்கும், மனிதனுக்கும் இடையிலான போராகும்’ என்றார். இவரது பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில், உள்ளூர் பாஜக தலைவர் ஆகாஷ் சக்சேனா கூறுகையில், ‘முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரோஷிக்கு எதிராக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளேன். முன்னாள் ஆளுநரின் பேச்சு தலிபான் சிந்தனையை  காட்டுகிறது.

சிலர் இந்த மாநிலத்தை தலிபானிய சிந்தனைக்கு உட்பட்டதாக மாற்ற விரும்புகிறார்கள். இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது’ என்றார். ஆகாஷ்  சக்சேனாவின் புகாரை பெற்ற போலீசார், முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷிக்கு எதிராக ஐபிசி 153-ஏ, 153-பி, 124-ஏ மற்றும் 505 (1) (பி) பிரிவுகளின்  கீழ் தேசதுரோக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : UP , Uttar Pradesh, former governor, treason case
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...