×

மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம், நுழைவாயிலில் 40 அடி உயரத்தில் பிரமாண்ட ஸ்தூபி : தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

சென்னை:மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்பட்டு வருகிறது என சட்டசபையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். இதுகுறித்து தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் ஆர்.காந்தி கூறியிருப்பதாவது:

ஒன்றிய அமைச்சகத்தின் ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் அபிவிருந்தி ஆணையம் (கைவினைப்பொருட்கள்) சார்பில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற திட்டத்தை ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்  வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தொன்மையான மற்றும் நலிந்த கைவினை கலைஞர்களின் குடியிருப்புகளை சீர்செய்து, மேம்படுத்தப்படும். அந்த குடியிருப்புகள் தேவைக்கு ஏற்ப அழகுபடுத்தி, அவர்கள் வசிக்கும் இடங்களை சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வழிவகுத்திடவும் இத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

மேலும் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கற்சிற்ப உற்பத்தி நிலையங்களை புதுப்பித்து, அங்கு வேலைபுரியும் கைவினைஞர்களுக்கு தேவையான வசதிகள் ெசய்து கொடுக்கப்படும். இதனால் அங்கு வருகைதரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் கற்சிற்ப உற்பத்தியாளர்கள் வணிகம் செய்திட இத்திட்டம் வழிவகை செய்யும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக ரூ.1.80 கோடி செலவில் மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 பணிகள் நடந்து வருகிறது. அதாவது காரணை கிராமத்தில் உள்ள கைவினைஞர்களின் குடியிருப்புகள் அழகுபடுத்துதல், வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ஐந்துரத வீதியில் உள்ள கைவினைஞர்களின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கைவினை சுற்றுலா கிராமத்திற்கான விளம்பர பாதாகைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. காரணை கைவினை சுற்றுலா கிராமத்திற்கான முகப்பு பகுதி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. பூம்புகார் நிறுவனத்தின் முயற்சியால் மாமல்லபுரத்தை உலக கற்சிற்ப நகரம் என்று உலக கைத்திற குழுமம் அங்கீகரித்துள்ளது. இது மாமல்லபுரம் கைசிற்ப கலைக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Craft Tourist Village ,Mamallapura ,TN Government , மாமல்லபுரம் , கைவினை, சுற்றுலா கிராம
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது