×

‘பரு’வப் பிரச்சினையா?

சித்த மருத்துவம் வழிகாட்டுகிறது!

இளமையில் கொடுமை எதுவென்று கேட்டால் முகப்பரு என்பார்கள் பலர். எல்லா காலத்திலுமே இளசுகளுக்கு முகப்பருதான் பிரதான பிரச்னை. முகலட்சணத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையே தவிடு பொடியாக்கக்கூடியன முகப்பருக்கள். இளமை காலத்தில் ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால் பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக தூசிகள் எளிதில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரக்கும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பினால் தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணெய் பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாகிறது. இப்படிதான் முகப்பரு வருகிறது. முகப்பரு பிரச்னைக்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம்.

* சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.  வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.

* பாசிப்பயிறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

* கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறை சேர்த்து குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.   

* தினமும் நன்கு வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளியில் வரும். இதனால் முகப்பரு நீங்கும்.

* அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முகப்பரு வராமல் தடுக்கலாம்.


இளங்கோ

Tags :
× RELATED பனை ஓலை கைவினைப் பொருட்களில் வருமானம் பார்க்கலாம்!