×

பெசன்ட் நகரில் நாளை நடைபெறும்: அன்னை வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை: சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை பெசன்ட் நகரில் நாளை நடைபெறும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது தேர்திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள சென்னை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது வருடாந்திர திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் சென்னை மாநகர காவல் துறை சார்பில் கீழ்க்கண்ட சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
* பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், பொது நலன் கருதியும் கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. நாளை (7ம் தேதி) தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும். பொது மக்களும், பக்தர்களும்  தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.
* பொதுமக்கள் நாளை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
* அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள்  செயல்பட கடந்த மாதம் 28ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது.
* இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* பொதுமக்களும், பக்தர்களும் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியோர்களது மேற்படி வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கோவிட் - 19 பெருந்தொற்றிலிருந்து விடுபட ஒத்துழைப்பு நல்கி நாளை   நடைபெறும் தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  கலந்து கொள்வதை  தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Pesant City ,Mother Agricultural Party ,Chennai Municipal Police Department , Besant Nagar, Annai Velankanni Election Festival, Ban
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...