காலாப்பட்டு மத்திய சிறையில் மர்மமாக இறந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு-முதல்வரிடம் உறவினர்கள் கதறல் - பரபரப்பு

காலாப்பட்டு :  காலாப்பட்டு சிறையில் மர்மமாக இறந்த விசாரணை கைதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்தும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க கோரியும் முதல்வர் ரங்கசாமியை உறவினர்கள் சந்தித்து முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அவ்வையார் கல்லூரி   பேராசிரியராக பணியாற்றி வருபவர் மும்தாஜ் பேகம். இவருக்கு சொந்தமாக, கோவில்பத்து கிராமத்தில் உள்ள நிலத்தைசிலர் போலி ஆவணங்களை தயாரித்து   அபகரிக்க முயற்சித்ததாக மும்தாஜ் பேகம் காரைக்கால் நகர   போலீசில் புகார் அளித்தார்.

 அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி   காரைக்கால் நகர போலீசார், சுல்தான்பேட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த   மும்தாஜ் பேகம், கட்டபொம்மன், மூர்த்தி, காரைக்கால் தர்மபுரம் ரியாஸ்,   மணிகண்டன், காமராஜர் நகர் ராஜாஜி, பெரியபேட் அசோக் என்ற அசோக்குமார் ஆகிய 7 பேர் மீது வழக்குபதிந்து 6 பேரை கைது செய்து சிறையில்   அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்த அசோக் என்ற அசோக்குமாரை (42) தனிப்படை   தேடிவந்த நிலையில் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டு புதுச்சேரி   காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதனிடையே நேற்று முன்தினம்   அசோக்கிற்கு திடீரென உடல்சோர்வு ஏற்படவே சிறை மருத்துவமனைக்கு நடந்து வந்த   அவர் மயங்கி விழுந்தார். உடனே காலாப்பட்டு அருகிலுள்ள தனியார்   மருத்துவமனையில் அசோக் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலுடன் இருந்த   அசோக் அங்கு சேர்க்கப்பட்ட சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சிறை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறைத்துறை துணை   சூப்பிரெண்டான பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். கிழக்கு   எஸ்பி ரக்சனா சிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ   முருகன் தலைமையிலான போலீசார் 176 பிரிவின்கீழ் வழக்குபதிந்து விசாரணை   மேற்கொண்டு வருகின்றனர்.

 ஏற்கனவே புதுச்சேரி சிறையில் கைதி ஜெயமூர்த்தி   இறந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு விசாரணை கைதி அசோக் இறந்த   சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அசோக் இறப்பு தொடர்பாக   மாஜிஸ்திரேட் விசாரணைக்கு காவல்துறை பரிந்துரைத்த நிலையில், நேற்று   மாஜிஸ்திரேட் யுவராஜ் விசாரணையை தொடங்கினார். மதியம் கனகசெட்டிகுளம்   தனியார் மருத்துவமனைக்கு சென்ற மாஜிஸ்திரேட் மர்மமாக இறந்த விசாரணை   கைதியின் உடலை பார்வையிட்டார்.  அப்போது அங்கிருந்த கைதியின்   உறவினர்கள் கதறி அழுத நிலையில், அவர்களிடம் அசோக் உடலை எங்கு பிரேத   பரிசோதனை செய்வது என்பது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் உறவினர்கள்   ஒப்புதலின் பேரில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அசோக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

உயர் அதிகாரிகள் முன்னிலையில், வீடியோ பதிவோடு நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து அசோக்குமாரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முன்வந்தனர். ஆனால் அசோக்குமாரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அசோக்குமாரின் உறவினர்கள் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு திரண்டு வந்து அவரிடம் முறையிட்டனர். அப்போது நன்றாக இருந்த அசோக்குமார் சிறைக்கு சென்றதும் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதை கொலை வழக்காகவும், வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் பதிவு செய்ய வேண்டும். அசோக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதை கேட்டுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும், முதலில் உடலை வாங்கி சென்று நல்லடக்கம் செய்யுமாறும் தெரிவித்தார்.

மேலும் அவரது குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை நிச்சயம் செய்துகொடுப்பேன் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து அசோக்குமாரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்று அசோக்குமார் உடலை பெற்றுக்கொண்டனர். பின்னர் காரைக்காலில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

சிறை கைதிகள் பரபரப்பு கடிதம்

காலாப்பட்டு   சிறையில் விசாரணை கைதிகள் மர்மமாக இறப்பது தொடர்கதையாகும் நிலையில்,   அங்குள்ள அனைத்து விசாரணை கைதிகள் சார்பில் புதுச்சேரி நீதிபதிகளுக்கு   பரபரப்பு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கடந்த 14ம் தேதி   கைதிகளிடம் தலைமை நீதிபதி குறைகேட்டு சென்றபின் சிறையில் தாங்கள் பல்வேறு   துன்புறுத்தலுக்குள்ளாகி மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி சிறைத்துறை ஐஜிக்கு தமிழில் புகார்களை மனுவாக அனுப்பியும்   தீர்வு கிடைக்கவில்லை என்பதை பதிவிட்டு, சிறையில் காலியாக உள்ள  கண்காணிப்பாளர் பதவிக்கான சண்டையில் உயர்அதிகாரியிடம் சிலர் நற்பெயர் எடுக்க கைதிகளை பலிகடா ஆக்குவதாக முறையிட்டுள்ளனர். எங்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகளுக்கு இருதய சிகிச்சை

இறந்து போன அசோக்குமாருக்கு மச்சகாந்தி என்ற மனைவியும், கவுசிக் (6), வர்ணபிரியா என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இதில் மகள் வர்ணபிரியாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் மருத்துவ வசதிக்காக காரைக்காலை சொந்த ஊராக கொண்ட அசோக்குமார் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

அங்கிருந்தபடி ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வந்த அசோக்குமார் வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றதில் தற்போது பிணமாக வீடு திரும்பியுள்ளார்.

Related Stories:

>