போடி அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குழாய் இணைப்பு மெகா பள்ளம்-பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

போடி : போடி அருகே, தேனிக்கு செல்லும் சாலையில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பாக சாலையோரம் பெரும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாதாளச் சாக்கடை கழிவுநீர் குழாயை போடி நகராட்சி பாதாளசாக்கடை கழிவுநீர் குழாயுடன் இணைப்பதற்காக, சாலைக்காளியம்மன் கோயில் அருகே பெரும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். ஆனால், பள்ளம் தோண்டி 21 நாட்களை கடந்த நிலையில் பணி இன்னும் முடிக்கப்பெறாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடி பஸ்நிலையத்திலிருந்து தேனி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு செல்கின்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த சாலைக் காளியம்மன் கோயிலை கடந்து செல்கின்றன.  இப்பகுதியில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் பள்ளம் தெரியாமால் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் செல்லும் டூவீலர்கள், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>