டோக்கியோ பாரா ஒலிம்பிக் நிறைவு 19 பதக்கங்கள் வென்று இந்தியா அபார சாதனை: 24வது இடம் பிடித்து அசத்தல்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர். இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய குழுவினர் பதக்க வேட்டை நடத்தி பிரமிக்க வைத்தனர்.

மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகரா, கலப்பு துப்பாக்கிசுடுதல் 50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் மனிஷ் நர்வால், ஆண்கள் ஈட்டி எறிதலில் (எப்64) சுமித் அன்டில், ஆண்கள் பேட்மின்டனில் பிரமோத் பகத், சிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அமர்க்களப்படுத்தினர். தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வென்ற வெள்ளி உள்பட 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் சேர்த்து, இந்த தொடரில் இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்தது. 2016 வரை நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா, டோக்கியோ போட்டியில் மட்டுமே 19 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக இந்தியாவின் மொத்த பாரா ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. சீனா முதலிடம்: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சீனா 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து 2வது இடமும், அமெரிக்கா 3வது இடமும் பிடித்தன. இந்தியா 24வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. நிறைவு விழாவில் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமையில் இந்திய குழுவினர் அணிவகுத்தனர். அடுத்த பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப். 8 வரை நடைபெற உள்ளது.

Related Stories:

More
>