ஷர்துல், பன்ட் அரை சதம் விளாசல்: இங்கிலாந்துக்கு 368 ரன் இலக்கு

லண்டன்: இந்திய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 368 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 99 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது.

ராகுல் 46, ரோகித் 127, புஜாரா 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி 22, ஜடேஜா 9 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜடேஜா 17 ரன்னிலும், அடுத்து வந்த ரகானே ரன் ஏதும் எடுக்காமலும் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கோஹ்லி 44 ரன் எடுத்து (96 பந்து, 7 பவுண்டரி) மொயீன் சுழலில் அவுட்டானார். இந்தியா 111 ஓவரில் 312 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், பன்ட் - ஷர்துல் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். இருவரும் அரை சதம் விளாசி அசத்த இந்தியா வலுவான முன்னிலை பெற்றது.

ஷர்துல் 60 ரன் (72 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 50 ரன் எடுத்து (106 பந்து, 4 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா 24 ரன், உமேஷ் 25 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 2வது இன்னிங்சில் 466 ரன் குவித்து (148.2 ஓவர்) ஆல் அவுட்டானது. சிராஜ் (3) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ் 3, ராபின்சன், மொயீன் தலா 2, ஆண்டர்சன், ஓவர்ட்டன், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Stories: