×

ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து வரும் 27ம் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு: உபியில் விவசாயிகள் அறிவிப்பு

முசாபர்நகர்: ஒன்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த 9 மாதங்களாக உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள், டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்திற்கு எந்தவித அசைவும் ஒன்றிய அரசு கொடுக்காததால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக, உத்தரப்பிரதேசத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

அதன்படி, சம்யுக்தா கிசான் மோர்சா சங்கம் ஏற்பாடு செய்த ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் உ.பி., அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 300 விவசாய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்க பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கார், பஸ், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்து வந்தனர். விவசாயிகள் முசாபர்நகர் குவிந்ததைத் தொடர்ந்து, 8,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் பேசுகையில், ‘‘எங்கள் உயிரே போனாலும் கூட, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் நடக்கும் போராட்டத்தை கைவிடமாட்டோம். இன்னும் எத்தனை மாதங்கள் ஆனாலும் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்தை களத்தை விட்டு நகர மாட்டோம். சுதந்திர போராட்டம் 90 ஆண்டுகள் தொடர்ந்தது. எனவே இந்த போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது. நாடு விற்கப்படுவதை நாம் தடுக்க வேண்டும்,’ என்றார்.

இதையடுத்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்தன. அதே போல, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் பாஜவுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2024 மக்களவை தேர்தலிலும் பாஜவை எதிர்த்து பிரசாரம் செய்யப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

* பாஜ எம்பி திடீர் ஆதரவு
விவசாயிகள் போராட்டத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாத நிலையில், உபியின் பாஜ எம்பி வருண் காந்தி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருண் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘விவசாயிகள் நமது ரத்தமும் சதையுமானவர்கள். விவசாயிகளுடன் மரியாதைக்குரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் துயரத்தை வலியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Tags : U.S. government ,UP , Nationwide blockade on the 27th against the U.S. government's agricultural law: Farmers' announcement in UP
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...